எதற்கு ஒரு வேலையே தேடி ஓடுகிறாய்? அடுத்தவன் கொடுக்கும் ஒரு வேலையே செய்யத் தெரிந்த உனக்கு தானாகவே ஒரு வேலையே செய்யத் தெரியாதா? அதற்குத் லேட்டஸ்ட் தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டுமா? சொல்லிக் கொடுத்திருக்க வேண்டிய கல்லூரிகள் சொல்லித் தரவில்லையா? அல்லது, தொழில்நுட்பத்தை சொல்லித் தந்தாலும், தானாக தொழில் தொடங்குவதை ஊக்குவித்திருக்க மாட்டார்கள். வேலை கிடைத்து விட்டதா என்றுதான் கேட்பார்களே ஒழிய, வேலை தொடங்கி விட்டாயா என்று யார்தான் கேட்பார்கள். நீயாக ஒரு வேலையை செய்யக் கற்றுக் கொடுக்காத படிப்புக்கு பெயர் ப்ரொபெஷனல் படிப்பா? தொழில்நுட்பம் வேண்டுமானால் வா.. நான் கற்றுத் தருகிறேன். போய் தொழிலை ஆரம்பி.
வேலை கிடைக்கவில்லை என்று மட்டும் வராதே. அசையத் தெரிந்த அனைத்திற்கும் இப்புவியில் வேலை உள்ளது. "வேலை இல்லை" என்றால் "உனக்கு ஒன்றுமே செய்யத் தெரியாது" என்று அர்த்தம். உனக்கு என்னதான் செய்யத் தெரியும்? அதை செய்.. போ.
கற்பி ! ஒன்றுசேர் !! புரட்சிசெய் !!! என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே நிறைய வேலை கொடுங்கள். அல்லது, நிறைய வேலைகளை செய்ய கற்றுக் கொடுங்கள். எந்தக் குழந்தையை பார்த்தாலும் "உனக்கு என்ன செய்யத் தெரியும்?", "ஓய்வு நேரங்களில் என்ன செய்கிறாய்?" எனக் கேட்க பழகிக் கொள்ளுங்கள். "எனக்கு நன்றாக பாடத் தெரியும்", "நான் நன்றாக விளையாடுவேன்", "நான் நன்கு மரம் ஏறுவேன்", "ஓய்வு நேரங்களில் செடி வளர்க்கிறேன்", "என் பெற்றோர்களுக்கு உதவி செய்வேன்", "நான் நன்றாக சமைப்பேன்" என எது வேண்டுமானாலும் பரவாயில்லை. ஒவ்வொரு பருவத்திலும் வயதுக்கேற்ற இரண்டு, மூன்று வேலைகளை செய்ய அவர்கள் பக்குவப் பட்டிருக்க வேண்டும். இயற்கையாகவே அவர்களுக்கு எதில் நாட்டம் இருக்கிறது? எதில் திறமை இருக்கிறது? என்று பாருங்கள். அதில் அவர்களை பிரகாசிக்க விடுங்கள். தொழில்களுக்குள் பேதம் புகுத்துவது நீங்களே. சிறு வயதிலிருந்தே நம் பிள்ளை என்னென்ன செய்யப் போகிறான் என சிந்தியுங்கள். படிப்படியாக நீங்கள் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டு அவர்களை சிந்திக்க விடுங்கள். அவர்களுக்கு அந்த சுதந்திரத்தை கொடுங்கள். உயர்கல்வி முடித்த பிறகு திடீரென்று ஒருநாள் உட்கார்ந்து நம் பிள்ளை என்ன படிக்க வேண்டும் என யோசிக்காதீர்கள். படித்து முடித்தவுடன் இன்னும் வேலை தேடிக் கொண்டிருக்கிறான் என்று சொல்லாதீர்கள். கம்ப்யூட்டர் படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருக்கும் ஒரு பிள்ளையை விட, முறையாக விவசாயம் செய்து அழகாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பிள்ளைதான் முறையாக வழிநடத்தப் பட்டிருக்கிறான்.
அதுபோல் படிப்பு என்பது வெறும் புத்தகப் படிப்பு மட்டும் போதாது. அன்றாட நிகழ்வுகள் பற்றிய பொது அறிவு, வார, மாத பத்திரிக்கைகள் மூலம் அறியக்கூடிய பொது அறிவு, பிற மொழித்திறன் முதலியவையும் மிக அவசியம். பிற்காலத்தில் ஒன்றை விட்டால் மற்றொன்றை பிடிக்கக் கூடிய ஆற்றலும், துணிச்சலும், தன்னம்பிக்கையும் இருப்பது மிக அவசியம். அதனால் பெற்றோர்கள் குழந்தைகளின் கற்றலில் தங்களையும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். தரமற்ற ஊடகங்கள் மலிந்து விட்ட இக்காலத்தில், குழந்தைகளுக்குத் தேவையான செய்திகளை சேகரித்து அவர்களுக்கு அறியத் தருவது, பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது, தரமான பத்திரிக்கைகளை படிக்க ஊக்கமூட்டுவது, எந்தந்த துறைகளில் சாதிக்க என்னென்ன செய்வது என்பது பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வது, சாதகமான இரண்டு மூன்று துறைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டு, அவற்றை நோக்கி குழந்தைகளை வழி நடத்துவது முதலியவை அவற்றில் அடங்கும். இந்த செயல்திட்டத்தில் குழந்தைகளை சக நண்பனாக இருந்து வழிநடத்த வேண்டுமே தவிர, அவர்களை திட்டுவதோ அடிப்பதோ கூடாது. அதே சமயம், குறிப்பிட்ட இடைவெளிகளில் அவர்களுடைய வளர்ச்சியை கண்காணிப்பது, எல்லாவற்றிலும் அவர்களுடைய கவனம் இருக்குமாறு, தினந்தோறும் அவர்களுடைய நேரத்தை பிரித்துக் கொடுத்து ஊக்கப் படுத்துவது மிக அவசியம். தேர்வுக்கு முதல் நாள் அமர்ந்து அவர்களை சோதிப்பது என்பது உங்களுடைய குறைபாடையே காட்டும்.
நான் தஞ்சாவூரில் படிக்கும் பொழுது தங்கியிருந்த வீட்டில் எங்கு பார்த்தாலும் மணிவேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய பொருட்களை பார்க்கலாம். அனைத்தும் அந்த முதலாளி அம்மா செய்தவை. வேலை முடித்த மதிய நேரங்களில் எப்பொழுதும் கையில் ஊசி, நூல், மணிகள், சுவெட்டர்களுடன் அவர்களை பார்க்கலாம். உயர்ந்த அரசுப் பணியில் இருந்து ஓய்வுப் பெற்ற முதலாளி அய்யா ஓய்வு நேரங்களில் தச்சுத் தொழிலில் ஈடுப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். சமீபத்தில் நான் படித்த ஒரு கட்டுரையில் "இந்தியாவில் உபயோகமான பொழுதுப் போக்கு என்பது மிகவும் குறைவு. இதனால் அவர்கள் இழக்கும் தொழில்நுட்ப அறிவு மிக அதிகம். நான் தற்போது செய்து கொண்டிருக்கும் இந்த தொழில் முழுக்க முழுக்க என்னுடைய பொழுதுப் போக்கிலிருந்து வந்தது. நான் சிறு வயதிலிருந்தே மின்னணுவியலில் மூழ்கியிருந்தேன். எனக்குத் தெரிந்த வல்லுனர்கள் கல்லூரி வயதிற்கு முன்பிருந்தே அந்த துறைகளை கரைத்துக் குடித்திருந்தார்கள். புகழ்பெற்ற பொறியாளர் ஜிம்மி வில்லியம்ஸ் பற்றித் தெரியுமா? அவர் உயர் கல்வி படிக்கும்பொழுது மின்னனுவியலைப் பற்றி தெரிந்து கொள்ள டிவி கடையில் வேலை பார்த்தார். மேலும் தான் வேலைக்கு செல்லும் காலம் முழுதும் கூட தன்னுடைய வீட்டில் அதற்கான அறையை ஒதுக்கி தன்னுடைய முயற்சியை தொடர்ந்தார்" என்று கூறப்பட்டுள்ளது. ஆக்கப்பூர்வமான, அதாவது, ஓய்வு நேரங்களில் அறிவை வளர்க்ககூடிய, ஆரோக்கியத்தை வளர்க்கக்கூடிய, வருமானத்தை வளர்க்கக்கூடிய, தனது கலைத்திறனை வெளிப்படுத்தக் கூடிய, தனது திறமைகளை பயன்படுத்தும் வகையில், தனது திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வகையில் பொழுதுப் போக்கை வளர்த்துக் கொள்ளுங்கள்.